Tuesday 23 January 2018

செம்புலம் - இரா. முருகவேள் (நாவல்)


தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு ஆளாகும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை, அதன் உண்மை நிலையை பிரச்சினைகள் நிறைந்திருக்கும் அதன் சமகாலத்திலேயே எழுத்தின்மூலம் பதிவு செய்திருப்பதற்காக தோழர் இரா. முருகவேள் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

கதை நடக்கும் பகுதியில் அதே ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு வளர்ந்தவள் என்ற வகையில் வாசித்து முடித்து இன்னமும்கூட ஒருவித கொதிநிலையிலேயே மனம் இருக்கின்றது. நமது நியாயமான கோபங்களை, காயங்களை இன்னொருவர் பேசுகையில் அதுவும் எழுத்தின்மூலம் உரக்கப் பேசுகையில் எழும் நிறைவை இந்நூல் தந்தது.

வீட்டிற்கொரு பூரணி

மேற்கு தமிழகத்தில் சாதியை இறுக்கமாக பற்றியிருக்கும் அடித்தளமாக விளங்குபவர்கள் பெண்கள். ஒரு கலப்பு மணத்தை வெளியே முறுக்கிக்கொண்டு திரியும் ஆண்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உறவுகளில் ஒருவர் கலப்பு மணம் செய்துவிட்டால் அதன் எதிர்ப்புக் குரலை பல ஆண்டுகளுக்கு கனன்றுக் கொண்டிருக்கச் செய்பவர்கள் பெண்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட பெரும்பாலான குடும்பங்கள் வெளிப்படையாகவே பெண்கள் தலைமையில் இயங்கியவைதான்.

இன்று பெருகிவிட்ட சாதிக்கட்சிகள் ஆதிக்க மனநிலையை வீட்டில் இருக்கும் பெண்களில் இருந்தே துவக்கச் சொல்கிறது. தங்கள் பெண்களை அடக்க இவர்கள் கையாளும் முறைதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. நீ ஒரு இளவரசி அல்லது மகாராணி என்பது இங்கு மிகப்பெரிய வசியச் சொல். இங்கு ஒரு பெண்ணுக்கு படிக்க, வேலை பார்க்க எல்லா சுதந்திரமும் உண்டு. ஆனால் அந்த கல்லூரி, உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வேலை பார்க்கும் இடம், முதலாளி இப்படி சுற்றி இருக்கும் அனைவருமே அதே சாதியை சேர்ந்தவர்களாகவோ குறைந்தபட்சம் புழங்கும் சாதியாகவோ(பிற சாதியை சேர்ந்த பிற்படுத்தபட்ட வகுப்பினர்) இருக்கும் ஒரு வட்டத்தை மிகத் தெளிவாக நிர்ணயம் செய்கிறார்கள்.

ஒருபக்கம் தாங்களே அடிமையாக இருக்கும் பெண் சமூகம் இன்னொரு சமூக மக்களிடம் ஆதிக்கம் செலுத்துவதை பெருமையாக நினைப்பதற்கு பின்னால் இருக்கும் உளவியல், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதாக இருக்கலாம்.

கதையில் பூரணியும் இப்படி தன் உரிமை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்யப்பட்ட வட்டத்தினுள் இளவரசியாகவும் அரசியாகவும் வளரும் பெண். பூரணியின் அத்தை கதாபாத்திரமும், அப்பத்தாவின் கதாபாத்திரமும் இல்லாத குடும்பங்களே இல்லை என சொல்லலாம். பெண்களை திருமணம் செய்த கையோடு அவளுக்கும் பிறந்த வீட்டிற்கும் இருக்கும் உறவை பெற்றவர்களே வெட்டிவிடுகிறார்கள். காலங்காலமாக ஆண் வாரிசுகளே சொத்தை அனுபவித்துக் கொள்வதும், பெண்களின் சொத்துரிமையை பறித்துக் கொண்டு சீர் செய்வதோடு நிறுத்திவிடுகிறார்கள். பின்னாட்களில் கணவரை இழந்து/பிரிந்து வாழும் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டினராலும் எல்லா வகையிலுமே புறக்கணிக்கப்படுகிறார்கள். அதே சமயம் நீதிமன்றம் சென்று போராடி சொத்து வாங்கியவர்களும் உண்டு. ஆனால் அதன்பின் அந்த பெண்ணின் பெற்றோர்கள்கூட அவர்களை ஒதுக்கி விடுவார்கள். எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு இழப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும். இன்று மேற்கு மாவட்டங்களில் இருக்கும் மிக முக்கியமான இப்பிரச்சினையை தெளிவாகவும், விரிவாகவும் பேசியிருப்பதில் மகிழ்ச்சி.

இன்னும் எத்தனை பாஸ்கர்கள்??

தற்போதைய அடக்குமுறை மற்றும் வன்கொடுமைகளுக்கு மத்தியில்  தன் சமூக மக்களின் உரிமைக்காக போராட காலனிக்கு ஒரு பாஸ்கர் உருவாவதே பெரிய செயல். அப்படி வளர்பவர்கள் நடுசாலையில் கொல்லப்படுகின்றனர், இரயில் தண்டவாளங்களில் வெட்டி வீசப்படுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் யார் என்று ஊருக்கே தெரியும். கொலை செய்தவர்களின் தலை மறைவு, பின் கைது சம்பவங்களும் நடக்கும். சில நாட்களிலேயே மீண்டும் கொலைக்கார்கள் வெள்ளை வேட்டி சகிதம் ஊருக்குள் திரிய, கொல்லப்பட்டவரின் குடும்பமும், சமூகமும் அனாதரவாக நிற்கும். இந்த அரசு எப்பவும் போல் ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்கு பல்லிளிக்கும். இவை எல்லாம் தாண்டி இன்னொரு பாஸ்கர் உருவாவது அவ்வளவு எளிதல்ல.

ஆனாலும் உருவாகிறார்கள். போராடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.

தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் வெளிப்படையாக நடக்கும் சாதி சண்டைகள் போல் மேற்கு மாவட்டங்களில் நடப்பதில்லை. இங்கு பொருளாதார ரீதியாக அருந்ததியினர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களை மேலே வளரவிடாமல் வைத்திருப்பதில் ஊருக்குள் இருக்கும் ஆதிக்க சாதி பெரியோர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அவர்கள் தங்களிடம் இதமாக பேசுவதை அன்பாக இருப்பதாக இங்கு எளிய மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்த இதமெல்லாம் நாம் அவர்கள் வாசலோடு நிற்கும்வரை மட்டும்தான்.

கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மூடுப்படுவதற்கு சாதியும் ஒரு காரணம் என்பதை நாவலில் சுட்டிக் காட்டியிருப்பது மிகச்சரி. அரசு வழங்கும் சலுகைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எவரும் படித்து வேலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் உள்ளூர் ஆதிக்கச் சாதி முதலாளிகள் தனி கவனம் செலுத்துவார்கள்.

கேம்ப்கூலியும் செங்கொடியும்

ஊரின் தொடக்கத்தில் இருக்கும் சென்சார் கதவுகள் கொண்ட பங்களா வீடுகளும், இன்னும் சிமெண்ட் தரையைக்கூட காணாத காலனி குடிசைகளும் உழைப்புச் சுரண்டலின் அடையாளமாய் நிற்கிறது.

நொய்யல் ஆற்றில் நீர் திருடிய தொழிற்சாலைகள் போலவே ஊர் பொது வாய்க்காலில் தண்ணீர் திருடும் பெருந்தோட்டக்காரர்கள், தேங்காய் நார் தொழிலின்மூலம் கிராமப்புறங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமயமான கதை, மட்டை மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், போட்டதை தின்றுவிட்டு பண்ணையம் பார்த்த ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறையினர் தற்போது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுவதால், தெற்கிலிருந்து கேம்ப் கூலிக்கு இளம் பெண்களை அழைத்துவந்து அடிமைபோல் நடத்துவது, தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகள், சாதிச் சங்கங்களின் தொடக்கம், அவை கட்சிகளாக உருவான பிண்ணனி, தன்னார்வ அமைப்புகள் இயங்கும் முறைகள் என நடப்பில் இருக்கும் எல்லா பொது பிரச்சினைகளையும் அதன் நுட்மான தகவல்களுடன் நாவல் பேசுகிறது.

செங்கொடி தோழர்கள் மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் முன்னிற்பவர்கள். இன்று கிராமப்புற மக்கள் அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இடத்துக்கு முன்னேறியிருப்பதிலும், கல்வி கற்பதிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு. விசைத்தறி உரிமையாளர்கள் ஒருவகையில் பெரிய மில் முதலாளிகளை நம்பி பிழைக்கும் கூலிகளாக இருந்தாலும் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கமுடியாததன் பிண்ணனியில் ஒருவேளை சாதியும் இருக்கலாம் என்கிற எண்ணம் இந்நூலை வாசிக்கும்போது வலுவானது. இன்னொருபுறம் மக்களுக்கும் அமைப்புக்கும் இடையில் சித்தாந்தங்களை புரிய வைப்பதில் ஒரு தூரம் இருக்கின்றது. மக்களுக்கு புரியாத எந்த போராட்டமும் புரட்சியாக மலராது என்பதை தோழர்களும் உணரவேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள், மட்டைமில் முதலாளிகள், தென்னை தோட்டக்காரர்கள், காவல் துறையினர், தன்னார்வ அமைப்பினர், ஒடுக்கப்பட்ட மக்கள் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் தரப்பு நியாயத்திலிருந்து பேசுவது போன்று நாவல் அமைந்திருக்கிறது. இது சரி, இது தவறு எனும் போதனைகளை ஆசிரியர் எந்த இடத்திலும் வைப்பதில்லை. அதை தொடர்ந்து நாவலுக்கு முடிவை எழுதாமல் விட்டிருக்கிறார். ஒருவகையில் சொல்லாமல் விட்ட முடிவு அச்சமூட்டுகிறது. விடிவுகாலமே இல்லை எனும் அவநம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது.  

நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே அமர்வில் வாசிக்க வைக்கும் விறுவிறுப்பான நடை. ஒரு கதையை வாசித்ததுபோல் அல்லாமல், ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வு நாவலில் இருந்தது. இலக்கிய வரையறைகளுக்குள் இந்நாவல் உள்ளதா என்ற ஆராய்ச்சிகள் பொருளற்றவை. ’கலை மக்களுக்காகஎன்கிற வகையில், கொங்கு மண்டலம் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை சமகாலத்தில் மிகச்சரியாக பதிவு செய்திருக்கும் முக்கியமான நூல் இது.

4 comments:

  1. கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மூடுப்படுவதற்கு சாதியும் ஒரு காரணம் என்பதை நாவலில் சுட்டிக் காட்டியிருப்பது மிகச்சரி. அரசு வழங்கும் சலுகைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எவரும் படித்து வேலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் உள்ளூர் ஆதிக்கச் சாதி முதலாளிகள் தனி கவனம் செலுத்துவார்கள். // I am sure, you never lived in any village. There is not a single school closed because of caste. I can challenge you to show if any one school. Its a utter lie. Right now there is a labor shortage but that doesnt mean that farming will stop, empty space always will be filled by air.

    ஊரின் தொடக்கத்தில் இருக்கும் சென்சார் கதவுகள் கொண்ட பங்களா வீடுகளும், இன்னும் சிமெண்ட் தரையைக்கூட காணாத காலனி குடிசைகளும் உழைப்புச் சுரண்டலின் அடையாளமாய் நிற்கிறது.// Its another way of getting envy or irritated with someone's rich. Who stopped them to become rich? If that is the case, you are also one of the reasons for making them poor.

    ReplyDelete
  2. Communism will never win. Communist writers will become rich by selling poverty, that's all this novel portrays

    ReplyDelete
  3. I am damn sure that, because you know the writer as a friend in progressive ghetto, to praise his garbage progressive write up, you wrote this "review".

    ReplyDelete